இறைச்சி கழிவுகளை குளத்தில் கொட்டிய வாலிபர் கைது
மார்த்தாண்டம் அருகே இறைச்சி கழிவுகளை குளத்தில் கொட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே இறைச்சி கழிவுகளை குளத்தில் கொட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இறைச்சி கழிவுகள்
மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் தேவசகாயம் ஆலயத்தின் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் யாரோ மர்ம நபர் இறைச்சி கழிவுகளை கொட்டியதாக தெரிகிறது.
இதனால் குளத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் குளத்தை கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் பெட்டியில் இறைச்சி கழிவுகளை ஏற்றியபடி குளத்தில் கொட்டுவதற்கு வந்துள்ளார். இதனை கவனித்த பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார்.
வாலிபர் கைது
விசாரணையில், நெல்லை மாவட்டம் பணகுடி தருமபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த மாணிக்கம் (வயது 25) என்பதும், மார்த்தாண்டம் இறைச்சி கடையில் இருந்து கழிவுகளை சித்திக், சந்திரன் ஆகியோர் கொடுத்து அனுப்பியதும், ஏற்கனவே இவர் தான் இறைச்சி கழிவுகளை கொட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து மாணிக்கம் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.