மதுரை விமான நிலையத்துக்கு துப்பாக்கியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு
மதுரை விமான நிலையத்துக்கு துப்பாக்கியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் விமானத்தில் சென்னை செல்வதற்காக கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த நிர்மல் பிரபு (வயது 26), மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் கொண்டு வந்த பையில் துப்பாக்கியும், தோட்டாவும் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனவே தனி அறையில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவர் கொண்டு வந்த துப்பாக்கியை சோதித்துப் பார்த்தபோது அது ஏர்கன் ரக துப்பாக்கி மற்றும் தோட்டா என்பது தெரியவந்தது. விசாரணையில், தவறுதலாக பயண அவசரத்தில் இந்த துப்பாக்கியை கொண்டு வந்ததாக நிர்மல் பிரபு கூறியதை தொடர்ந்து போலீசார் அவரை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.