நண்பர்களுக்கு மது விருந்து வைக்க பணம் கேட்டு தாயை அடித்துக்கொன்ற வாலிபர் கைது

தா.பழூர் அருகே நண்பர்களுக்கு மது விருந்து வைக்க பணம் கேட்டு தாயை அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-28 18:53 GMT

மது விருந்து

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பாலசுந்தரபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் இளையபெருமாள் (வயது 60). இவருடைய மனைவி இளமதி (55). இவர்களுடைய 4 மகள்களும், இளம்பரிதி (25) என்ற மகனும் உள்ளனர். இளம்பரிதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி இளம்பரிதி தனது நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது அவரது நண்பர்கள் எப்போதும் தாங்களே மது விருந்து அளிப்பதாகவும், இளம்பரிதி மது குடிப்பதோடு சரி என்றும் கேலி செய்துள்ளனர். இதையடுத்து இளம்பரிதி அன்று இரவு தனது வீட்டிற்கு சென்று தாயார் இளமதியிடம் நண்பர்களுக்கு மது விருந்து வைக்க ரூ.3 ஆயிரம் வழங்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்க முடியாமல் இளமதி சத்தம் போட்டு உள்ளார்.

அடித்துக்கொலை

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பரிதி தனது தாயாரை கீழே தள்ளி கழுத்தை பிடித்து சத்தம் போடாதே என்று கன்னத்தில் அடித்திருக்கிறார். இதில் இளமதி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுபோதையில் இருந்த இளம்பரிதி வீட்டின் வெளியே படுத்து தூங்கிவிட்டார். இந்தநிலையில் காலையில் போதை தெளிந்து எழுந்து பார்த்தபோது தாயார் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பரிதி அங்கிருந்து வெளியூர் தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிறையில் அடைப்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊர் திரும்பிய இளம்பரிதியை தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்