தாய் குறித்து இழிவாக பேசியதால் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை - 3 பேர் போலீசில் சரண்

தாய் குறித்து இழிவாக பேசியதால் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

Update: 2022-10-04 08:54 GMT

திருவள்ளூர் அடுத்த திருமழிசை குண்டுமேடு எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரவடிவேல். இவரது மகன் சந்தோஷ் குமார் (வயது 28). இவர் அஞ்சல் வழியில் பி.ஏ.வரலாறு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் சந்தோஷ்குமார் குண்டுமேடு பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான கவுதம் (25), அவரது சகோதரர் கருப்பு முத்து என்கிற முத்து (27), வெள்ளமுத்து (27) ஆகியோருடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.

அப்போது சந்தோஷுக்கும் அவரது நண்பர் கவுதம் என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில் கவுதமின் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை சந்தோஷ்குமார் பறித்துச்சென்று விட்டார். இதுகுறித்து அறிந்த கவுதமின் தாயார் சென்று சந்தோஷ்குமாரிடம் தகராறு குறித்து விசாரித்து பின்னர் தன்னுடைய மகனின் செல்போனை தருமாறு கேட்டார். அப்போது சந்தோஷ்குமார் அவரை தகாத வார்த்தையால் பேசி அனுப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கவுதம், அவரது சகோதரர் கருப்பு முத்து மற்றும் நண்பர் வெள்ளை முத்து ஆகியோர் நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக சந்தோஷ்குமாரை வரவழைத்து கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் கை கலகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஆத்திரத்தில் இருந்த கவுதம் உள்பட 3 பேரும் சேர்ந்து சந்தோஷ்குமாரை தாக்கி கீழே தள்ளினார்கள். அப்போது அங்கு இருந்த கிரானைட் கல்லை எடுத்து சந்தோஷ் குமாரின் தலையில் போட்டு படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த படுகொலை தொடர்பாக வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதம், அவரது சகோதரர் கருப்பு முத்து, நண்பர் வெள்ளை முத்து ஆகியோரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கவுதம், கருப்பு முத்து வெள்ளை முத்து ஆகியோர் வெள்ளவேடு போலீசில் சரண் அடைந்தனர். போலீசார் மேற்கண்ட 3 பேரிடமும் இது சம்பந்தமாக தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்