ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
வடமதுரை ஏ.வி.பட்டி சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்
வடமதுரை ஏ.வி.பட்டி சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் அங்கு சிதைந்து கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி அந்த வாலிபர் இறந்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. ஊதா நிறத்தில் பேண்ட், சட்டை அணிந்திருந்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.