பெட்ரோல் பங்க்கில் பணம் திருட்டு; வாலிபர் கைது
நெல்லை அருகே பெட்ரோல் பங்க்கில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது 45). இவர் கங்கைகொண்டான் பழைய பைபாஸ் ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஜேசுராஜா ரூ.24 ஆயிரத்தை பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கே வைத்திருந்த பணத்தை காணவில்லை. மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜேசுராஜா கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் மடத்துப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த குழந்தைவேல் என்ற பீட்டர் (24) பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைவேலை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மீட்கப்பட்டது.