வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
திருக்கடையூர் அருகே வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார் . மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.;
திருக்கடையூர்:
வாலிபர் பலி
திருக்கடையூர் அருகே ஆக்கூர் பஞ்சாகை கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஆகாஷ் (வயது 23). டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் ஆக்கூர், மடப்புரம் ,வவ்வால் தோப்பை சேர்ந்த தனது நண்பர் விஷ்வாவுடன் காரைக்காலில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ஆகாஷ் ஓட்டினார்.
இந்நிலையில் திருக்கடையூர் அருகே அன்னப்பன்பேட்டை வளைவு பகுதியில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென அங்கு உள்ள ஒரு வாய்க்கால் மதகில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற ஆகாஷ் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம்
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஷ்வாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த ஆகாஷ் உடல் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பொறையாறு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.