ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;
ஸ்ரீபெரும்புதூர்,
திருவாரூரை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 25). தஞ்சாவூரை சேர்ந்தவர் அஜித் (24). இவர்கள் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அபிஷேக் ஓட்டி சென்றார். அஜித் பின்னால் அமர்ந்திருந்தார். தண்டலம் அருகே பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரக்கோணம் கூட்டு சாலையில் சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்வதற்காக திரும்பிய கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் தடுமாறி விழுந்தனர். அஜித் மீது லாரி ஏறி இறங்கியதில் லாரி சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அபிஷேக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பாலியான அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.