கள்ளக்காதலியை சந்திக்க முடியாததால் வாலிபர் தற்கொலை
மதுரையில் இருந்து கோவைக்கு வந்து கள்ளக்காதலியை சந்திக்க முடியாததால் வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையில் இருந்து கோவைக்கு வந்து கள்ளக்காதலியை சந்திக்க முடியாததால் வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முகமது ஹாருன். இவருடைய மகன் இம்ரான்கான் (வயது 26). கூலி தொழிலாளி. இவருக்கு, அதேப்பகுதியை சேர்ந்த திருமணமான 25 வயதான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இது அந்த பெண் வீட்டுக்கு தெரிய வரவே அந்த பெண்ணின் கணவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் வீட்டைவிட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
கோவை வந்தார்
இதனால் இம்ரான்கான் தனது கள்ளக்காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண் கோவையை அடுத்த கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக இம்ரான்கானுக்கு தகவல் கிடைத்தது.
உடனே அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய இம்ரான்கான், உன்னை பார்க்காமல் இருக்க முடிய வில்லை என்றும், உன்னை திருமணம் செய்து கொள்ள நான் தயார் என்றும் கூறி உள்ளார். அதை அந்த பெண் ஏற்றுக் கொள்ள வில்லை என்று தெரிகிறது. ஆனாலும் இம்ரான்கான் தனது கள்ளக்காதலியை பார்ப்பதற்காக கடந்த 25-ந் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு கோவை வந்தார்.
விஷம் குடித்தார்
அவர் கோவைப்புதூர் பகுதியில் தனது கள்ளக்காதலியை தேடி அலைந்தார். ஆனாலும் அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர், உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்து, மது வாங்கினார்.
பின்னர் அதில் விஷம் கலந்து குடித்து விட்டு மதுரைக்கு செல்ல பஸ் ஏறினார். அப்போது அவர் தனது தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, தான் கள்ளக்காதலியை தேடி கோவை வந்ததாகவும், அவரை சந்திக்க முடியாததால் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டதாகவும் கூறினார்.
பரிதாப சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த இம்ரான்கானின் தந்தை முகமது ஹாருன், மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் சென்றார். அங்கு அவர் தனது மகன் வந்ததும் மீட்டு மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி இம்ரான்கான் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.