காதல் மனைவி தாலியை கழற்றி கொடுத்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

திருமணம் முடிந்த 2-வது நாளில் காதல் மனைவி தாலியை கழற்றி கொடுத்ததால் வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2023-07-04 20:00 GMT
திருமணம் முடிந்த 2-வது நாளில் காதல் மனைவி தாலியை கழற்றி கொடுத்ததால் வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதல் திருமணம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே டி.நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் அருண் சக்கரவர்த்தி (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு வடக்கிபாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஆச்சிப்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்ததாக தெரிகிறது.

இதற்கிடையே அவர்கள் 2 பேரும் காணாமல் போனதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தாலியை கழற்றி கொடுத்தார்


இதை அறிந்த காதல் ஜோடி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அருண் சக்கரவர்த்தியுடன் அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் உறவினர்கள் சிலர் பேசியதாக தெரிகிறது.

இதை கேட்ட அந்த பெண் தாலியை கழற்றி அருண் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டு, பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

இதனால் மனவேதனை அடைந்த அருண் சக்கரவர்த்தி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலுகா போலீசார் தற்கொலை முயற்சி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்