அரசு பள்ளி மாணவரை அடித்த ஆசிரியை பணியிடை நீக்கம்

சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் மாணவரை அடித்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பெற்றோர் போலீசில் கடிதம் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-12-21 18:52 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள கூடுவேலி சாவடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சிதம்பரத்தை சேர்ந்த கண்ணகி (வயது 56).

இவர் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை, சரியாக படிக்கவில்லை என்று கூறி, கண்டித்துள்ளார். அப்போது அலுவலக பயன்பாட்டுக்காக இருக்கும் பைல் போல்டரில் வரும் பிளாஸ்டிக் குச்சியை கொண்டு அந்த சிறுவனின் தலையில் அடித்ததுடன், அந்த மாணவனைவும் திட்டியுள்ளார்.

வீடியோ வெளியானது

இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலை தளத்தில் வெளியிட்டார். இதை பார்த்த பலரும், ஆசிரியையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதுபற்றி அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார், மாணவனின் பெற்றோரை அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, எனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவனுக்கு கண்டித்து பாடம் சொல்லி கொடுக்க கூறியிருந்தோம். அதனால் தான் அந்த ஆசிரியை, கண்டித்துள்ளார். எனவே இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் அவர் மீது எடுக்க வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர்.

பணியிடை நீக்கம்

இதற்கிடையே, மாணவரை அடித்த ஆசிரியை கண்ணகியை மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் சுகப்பிரியா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்