இரக்கமற்ற அரசின் ஆட்சியில் அரிசிக்கும் வரி..!! - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.
இதனை தொடர்ந்து வரிவிதிப்பிற்குள்ளான மாற்றியமைக்கப்பட்ட பொருட்களின் பொருட்கள் விலை இன்று முதல் உயர வாய்ப்புள்ளது. பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிள் இடப்பட்ட பால்,தயிர்,மோர், பன்னீர் போன்ற பல்வேறு பொருட்களுக்கு முன்பு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படவில்லை. தற்போது 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் இப்பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
இதே போல், பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் பிராண்ட் பெயர் இல்லாத அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு முதல் முறையாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலையும் உயர வாய்ப்புள்ளது.
மேலும், அரிசி ஆலை எந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரிசியின் விலையிலும் இதன் தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது மத்திய அரசு. இதேபோல, பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
புதிய வரியால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும். ஏற்கெனவே கடும் விலைவாசி உயர்வால் பரிதவிக்கும் பொதுமக்கள் மேலும் சிரமப்படுவர்.எல்லாவற்றுக்குமே ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டுமென்ற மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ளாவிட்டால், மக்களின் கடும் கோபத்திலிருந்து தப்ப முடியாது. எனவே, உடனடியாக புதிய வரி விதிப்புகளை வாபஸ் பெறுவது அவசியம்". இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.