சின்னம்மை நோய் அறிகுறி கண்டறியப்பட்டால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் சின்னம்மை நோய் அறிகுறி காணப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளார்.
சின்னம்மை நோய்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது கோடைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் சின்னம்மை நோய் ஏற்பட்டு வருகிறது. இந்த நோய் வேரிசெல்லா என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் சுவாசக்காற்று மூலம் இந்நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.
காய்ச்சல், தலைவலி, பசியின்மை, சிறு கொப்பளங்கள், அரிப்பு மற்றும் தொண்டை வலி போன்றவைகள் அறிகுறிகளாக காணப்படும். இது போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் சூடான உணவு பொருட்கள், காரமான உணவு மற்றும் உப்பு அதிகமான உணவினை தவிர்க்க வேண்டும்.
இளநீர், அரிசி கஞ்சி மற்றும் மோர் போன்ற உணவு வகைகள் பருக வேண்டும். சின்னம்மை பரவுதலை தவிர்க்க பாதிக்கப்பட்ட நபரை தனிமைபடுத்தி வைக்க வேண்டும். அவர் பயன்படுத்திய துணிகள் மற்றும் படுக்கையினை மற்றவர்கள் பயன்படுத்தகூடாது. அனைவரும் அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு நன்கு கழுவ வேண்டும்.
இலவச சிகிச்சை
சின்னம்மை நோயின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏ சைக்ளோவிர் மாத்திரைகள் தினமும் வேளைக்கு 800 மி.கிராம் வீதம் 5 வேளை என 5 நாட்கள் எடுத்துக்கொண்டால் நோயின் தாக்கம் குறைந்து விடும். இதற்கான சிகிச்சை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இலவசமாக அளிக்கப்படும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் சின்னம்மை நோய் அறிகுறிகள் காணப்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தகவல் அளிக்க வேண்டும். மேலும் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ அல்லது அரசு மருத்துவமனைகளுக்கோ சென்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.