பள்ளிக்கூடத்தில் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு
முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிவித்த மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முதன்மை கல்வி அலுவலர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகிறார்கள். பெற்றோர்கள் மாலை அணிவித்தால் அவர்களது குழந்தைகளும் மாலை அணிந்துள்ளனர்.
இந்த நிலையில் மாலை அணிந்து நெற்றியில் சந்தனம், குங்குமம் பூசிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடாது என சில பள்ளிக்கூட நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாலையை கழட்டி...
இந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்திற்கு மாலை அணிந்து சென்ற மாணவிகளை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாலையை கழட்டி பைக்குள் வைத்து விட்டு தான் வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த தகவல் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
முதன்மை கல்வி அலுவலர்
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு நேற்று பாளையங்கோட்டையில் உள்ள அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்று திடீரென ஆய்வு நடத்தினார். பின்னர் பள்ளிக்கூடத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு மாலை அணிந்து வரும் மாணவிகளை, ஆசிரியர்கள் யாரும் கண்டிக்கக்கூடாது. இதை மீறினால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றார்.
கல்லிடைக்குறிச்சி
இதேபோல் கல்லிடைக்குறிச்சியில் உள்ள பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு மாலை அணிவித்து சென்றனர். அப்போது, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை பெற்றோரை அழைத்து வரும்படி கூறினார்கள். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் பள்ளி ஆசிரியர்களிடம் சென்று முறையிட்டனர். அதற்கு பள்ளி ஆசிரியர்கள், மாலை அணிவித்த மாணவர்களை வெளியே அனுப்பவில்லை. அவர்கள் வளையல் மற்றும் கம்மல் அணிந்து வந்ததால் அவர்களது பெற்றோரை வரச் சொல்லி அறிவுறுத்துவதற்காகவே அனுப்பினோம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். உடனடியாக பள்ளி மாணவர்கள் வளையல் மற்றும் கம்மல் அணிவிக்காமல் மாலையுடன் பள்ளிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.