இழப்பீடு கேட்ட வழக்கில் திடீர் திருப்பம்
வடகாடு அருகே விபத்தில் உயிரிழந்த வாலிபர் குடும்பத்தினர் இழப்பீடு கேட்ட வழக்கில் திடீர் திருப்பமாக போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக காப்பீடு நிறுவனம் புகார் கொடுத்துள்ளது.
வாலிபர் சாவு
வடகாடு அருகே நெடுவாசல் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் முருகேசன் (வயது 30). இவர், கடந்த 2021 பிப்ரவரி 23-ந் தேதி இரவு கைகாட்டி- பேராவூரணி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டி.என். 55 யூ 6161 எண் கொண்ட லாரி, முருகேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடகாடு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது விபத்து ஏற்படுத்திய லாரிக்கான காப்பீடு உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டது.
சம்மன்
இந்த நிலையில் முருகேசனின் குடும்பத்தினர் புதுக்கோட்டை மோட்டார் வாகன விபத்து உரிமையியல் நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனம் ரூ.50 லட்சம் எங்களுக்கு தரவேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளனர். இது சம்பந்தமாக நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கோ டிஜிட் சென்ட்ரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கோ டிஜிட் சென்ட்ரல் அலுவலகத்தின் சட்டம் மற்றும் புலனாய்வுப் பிரிவு மேலாளர் விஜயலெட்சுமி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக வடகாடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அந்த புகாரில், கடந்த 2021 பிப்ரவரி 23-ந் தேதி பேராவூரணி - கைகாட்டி சாலையில் நடந்த விபத்தில் முருகேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அதனால் விபத்து ஏற்படுத்திய லாரி காப்பீடு செய்துள்ள கோ டிஜிட் நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு தர கேட்டுள்ளனர். ஆனால் கோப்புகளை ஆய்வு செய்த போது விபத்து ஏற்படுத்திய டி.என். 55 யூ 6161 லாரி தங்கள் நிறுவனத்தில் காப்பீடு செய்யவில்லை. மேலும் நீதிமன்றத்திற்கு போலி ஆவணங்களை தாக்கல் செய்த லாரி உரிமையாளர் அஞ்சலை மீது எங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியான காப்பீட்டு ஆவணம் தயாரித்து வழங்கியதாகவும், எங்கள் நிறுவன பெயர் மற்றும் முத்திரையை தவறாக பயன்படுத்தியமைக்காகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த புகார் குறித்தும் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.