திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

Update: 2022-10-18 19:47 GMT

ராமநத்தம்:

திட்டக்குடி நகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட தர்மகுடிக்காடு பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது தங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், திட்டக்குடி நகராட்சியில் உள்ள கழிவு நீரை வெள்ளாற்றில் விடுவதற்காக தர்மகுடிக்காடு பகுதியில் வடிகால் அமைப்பதற்கு எதிர்ப்புதெரிவித்தும் கோஷம் எழுப்பினர்.

சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

அப்போது அலுவலகத்துக்கு வந்த நகராட்சி தலைவர் வெண்ணிலாவின் கணவர் கோதண்டத்தை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி அடிப்படை வசதிகள் கேட்டு அவரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திட்டக்குடி போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தர்மகுடிக்காடு பகுதிக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும், கழிவுநீரை வெளியேற்றுவதற்காக வடிகால் அமைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றப்போவதில்லை எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து செ்னறனர். இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்