புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்
கள்ளக்குறிச்சியில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள 10 முக்கிய பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் எம்.எல்.ஏ.க்கள் மனு அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முக்கிய பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுவை கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி நகராட்சி மாவட்டத்தின் தலைநகர் என்பதால் பல்வேறு காரணங்களுக்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்கின்றனர். இதனால் நகர பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரில் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கள்ளக்குறிச்சியில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். காந்திரோடு, துருகம்சாலை, சேலம் மெயின்ரோடு, கச்சேரிசாலை ஆகிய சாலைகள் இணையும் நான்குமுனை சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். வெளிவட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகர தெருக்களில் இயங்கி வரும் இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகளை அகற்றி நகரில் ஒதுக்குப்புற இடத்தில் இறைச்சிக்கூடம் மற்றும் இறைச்சிபதப்படுத்தும் நிலையம், இறைச்சி விற்பனைக்கூடம் என ஒருங்கிணைந்த வளாகம் அமைத்து அங்கு இறைச்சி விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சித்தலூர்-பானையங்கால் சாலையின் குறுக்கே செல்லும் மணிமுக்தாஆற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்குகள் அதிகம் பயிரிடப்படுவதால் இப்பகுதியில் கூட்டுறவு ஜவ்வரிசி ஆலை அமைக்க வேண்டும். மேலும் கள்ளக்குறிச்சியில் அரசு சட்ட கல்லூரி, பொறியியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. அப்போது தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், நகர செயலாளர் பாபு, தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் ரங்கன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.