போலீஸ் நிலையத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்

வாணியம்பாடியில் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நள்ளிரவில், தனது காதலியான பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-08-24 00:10 GMT

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார் (வயது 26). இவரும் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் கடந்த 2021-ம் ஆண்டு காவலர் பயிற்சியில் சேர்ந்ததில் இருந்து காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜ்குமார், அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி

இதனால் மனமுடைந்த ராஜ்குமார் திடீரென வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மின்விசிறியில் சால்வையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனை வீடியோ காலில் பார்த்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பது குறித்து தெரிவித்துள்ளார்.

கதவை உடைத்து மீட்டனர்

உடனடியாக அங்கு பணியில் இருந்த போலீசார் அறைக்குள் இருந்த சப்- இன்ஸ்பெக்டரை அழைத்துள்ளனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. எனவே அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்குவதற்காக நின்று கொண்டிருந்த ராஜ்குமாரை அவர்கள் மீட்டனர்.

பின்னர் இதுகுறித்து வாணியம்பாடி துணை சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து சென்ற அவர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்