தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவர்
கொடைக்கானலில் தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ்-2 மாணவர் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கொடைக்கானல் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் எட்வர்டு கென்னடிபாபு (வயது 45). தனியார் நிறுவனத்தில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகன் ரிபாஸ் ஆண்டனி. இவர் கொடைக்கானலில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்தநிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எட்வர்டு கென்னடிபாபுக்கு நேற்று முன்தினம் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே அவரது மகன் ரிபாஸ் ஆண்டனிக்கு நேற்று பிளஸ்-2 வணிகவியல் தேர்வு இருந்தது. தந்தை இறந்ததால் மிகுந்த வேதனையில் இருந்த அவர், கனத்த இதயத்துடன் தேர்வு எழுத முடிவு செய்தார். இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த அவர், நேற்று காலை தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். பின்னர் தேர்வை முடித்துவிட்டு, அவர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.
தந்தை இறந்த சோகத்திலும் மாணவர் ரிபாஸ் ஆண்டனி தேர்வெழுதியது, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.