கேரம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் மாணவன் கொலை

காட்பாடியில் கேரம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் மாணவன் கொலை செய்யப்பட்டான்.

Update: 2023-05-24 18:52 GMT

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கேரம் விளையாடினர்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் துரை சரவணன் (வயது 12). வஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து முடித்துள்ளான்.

அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு மாணவன்(14) அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து முடித்துள்ளான். துரைசரவணனும், அந்த மாணவனும் நண்பர்கள். கோடை விடுமுறை என்பதால் நண்பர்கள் இருவரும் நேற்று சேனூர் கிராமத்தில் கேரம் விளையாடி உள்ளனர்.

மாணவன் கொலை

அப்போது துரை சரவணனுக்கும், அந்த மாணவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அந்த மாணவன் பலமாக தாக்கியதில் துரைசரவணன் அங்கேயே சுருண்டு விழுந்து பலியானதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து பயந்த அந்த மாணவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்த மாணவன் துரை சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்

விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் மாணவன் பலியான சம்பவம் சேனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்