மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மாணவர்

கும்பகோணத்தில் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மாணவர் போலீசாரிடம் சிக்கிய போது அழுது அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-18 20:02 GMT

கும்பகோணம்:

கும்பகோணம் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த நிலையில் நேற்று காலை கும்பகோணம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் கும்பகோணம் மாநகர பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சிறுவன் ஒருவனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த சிறுவன் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருவதும், பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்ததும், தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து வர போலீசார் அறிவுறுத்தினர். போலீசாரை பார்த்து பயந்த அந்த மாணவன் அழுது அடம் பிடித்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவனை சமாதானப்படுத்திய போலீசார் அவனது பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அவர்களுடன் மாணவனை அனுப்பி வைத்தனர். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்