அறுந்து தொங்கிய மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மாணவன் சாவு
திருவாரூர் அருகே கனமழையால் அறுந்து தொங்கிய மின் கம்பி உரசியதில் சைக்கிளில் சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தான்.
6-ம் வகுப்பு மாணவன்
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஜலாலியல் தெரு பகுதியை சேர்ந்தவர் சுல்தான் சலாவுதீன். இவர், சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி நஜிபு நிஷா. இவர்களது மகன் முகமது முஜமில்(வயது 11), திருவாரூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
அறுந்து தொங்கிய மின்கம்பி
திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் பட்டக்கால் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த முகமது முஜமில் ஜலாலியல் தெருவில் உள்ள தனது வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.
அப்போது அந்த பகுதியில் கனமழையால் அறுந்து தொங்கிய மின் கம்பி மாணவன் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தான். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முகமது முஜமிலை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சோகம்
இதையடுத்து முகமது முஜமில் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.