சேறும், சகதியுமான சாலையில் புற்கள் நடும் போராட்டம்
சேறும், சகதியுமான சாலையில் புற்கள் நடும் போராட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், சூசையப்பர்பட்டினம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் முறையான வடிகால் வசதி, சாலை வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் தற்போது பெய்த மழையில் சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும் சமீபத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து சேறும், சகதியுமான சாலையில் புற்கள் நடும் போராட்டம் நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது சாலை மிகவும் சேறும், சகதியுமாக உள்ளதால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறியவகை வாகனம் சென்றால் கூட சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அவர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.