வீடு புகுந்து பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்... கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

தெரு நாய் கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-27 19:21 GMT

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 37). இவருடைய மனைவி நந்தினி(28). இவர்களுக்கு வினித்(6), தர்ஷன்குமார் என்ற 1 மாத கைக் குழந்தையும் உள்ளனர். சக்திவேல் மாலத்தீவில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் குழந்தைகளுடன் நந்தினி வீட்டில் வசித்து வருகிறார். வினித் வீட்டின் அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று காலை நந்தினி தனது கைக்குழந்தையை வீட்டின் முன் பகுதியில் தூங்க வைத்தார். பின்னர் வீட்டுத் தோட்டத்துக்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தையின் அழுகுரல் சத்தம் அதிகமாக கேட்டது. இதைகேட்டு அதிர்ச்சியடைந்த நந்தினி ஓடி வந்து பார்த்தபோது குழந்தையின் அருகே தெரு நாய் ஒன்று நின்றதாக கூறப்படுகிறது. குழந்தை கழுத்தில் காயத்துடன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தது. இதில் பதறிய நந்தினி அலறி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்தனர். உடனே நந்தினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டது.

தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் நந்தினி வீட்டுக்கு விரைந்து வந்து நாய் கடித்து இறந்ததாக கூறப்பட்ட குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்துபோன குழந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கியது போல் காயம் இருந்தது. மேலும் நாய் கடித்து குதறியதற்கான எந்த தடயங்களும் உடலில் இல்லாததால் குழந்தையின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் நாய் கடித்து இறந்ததா? அல்லது குழந்தை கொலை செய்யப்பட்டதா? என்பது தெரியவரும் என்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்