மாட்டு கொட்டகையில் புகுந்த பாம்பு
நாகூர் அருகே மாட்டு கொட்டகையில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
நாகூர்:
நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைச்சேரியில் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் மூங்கில் மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இந்த நிலையில் மூங்கில் காட்டில் இருந்து வெளிவந்த பாம்பு ஒன்று அப்பகுதியில் உள்ள லெனின் என்பவரின் வீட்டுக்கு எதிரே உள்ள மாட்டு கொட்டகையில் புகுந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். உடனே அந்த பாம்பு மாட்டு கொட்டகையில் போடப்பட்டிருந்த கான்கிரீட் தரைக்கு அடியில் சென்று விட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி 7அடி நீளம் உள்ள நல்ல பாம்பை பிடித்தனர். பின்னர் அதை ஒரு சாக்குப்பையில் அடைத்து வனப்பகுதியில் விட்டனர்.