திண்டுக்கல்லில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலக கூட்டரங்கில், மாவட்ட எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவ சங்க செயலாளர் கிறிஸ்டோபர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திண்டுக்கல் மாவட்ட எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்க செயலாளர் ஈஸ்வரகுமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை எலும்பு மற்றும் மூட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 6 லட்சம் வாகன விபத்துகள் நடக்கின்றன. இதில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 113 பேர் பலியாகின்றனர். 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் காயமடைகின்றனர். விபத்தில் சிக்குவோர் எலும்பு முறிவால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எலும்பு மற்றும் மூட்டு தினத்ைதயொட்டி, விபத்துகளை தடுப்பதற்காகவும், எலும்பு முறிவு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது.
குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு பாதுகாப்பு குறித்தும், விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு முதலுதவி அளிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் காணொலி காட்சி மூலமாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் கேள்விகளுக்கு எலும்பு முறிவு மருத்துவ நிபுணர்கள் பதில் அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும் இலவச எலும்பு வலிமை கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, உடல் எடையை பராமரித்தல், உடற்பயிற்சி மேற்கொள்வது, உணவு பழக்க வழக்கங்கள், காயங்களை தவிர்த்தல், சுயமாக மருத்துவம் செய்வதால் நேரும் ஆபத்து ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் டாக்டர் முரளிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.