விளையாட சென்ற பள்ளி மாணவி ஏரியில் தவறிவிழுந்து பலி
காவேரிப்பாக்கம் அருகே விளையாட சென்ற பள்ளி மாணவி ஏரியில் தவறிவிழுந்து பலியானார். மற்றொரு மாணவி உயிருடன் மீட்கப்பட்டார்.
நீரில் மூழ்கினர்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த முசிறி கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மோனிகா (வயது 14). வள்ளுவம்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் வசிக்கும் அவரது தோழியான, குப்பன் என்பவரின் மகள் செல்வராணி (9) என்பவரோடு அருகில் உள்ள ஏரியில் விளையாட சென்றுள்ளார்.
அங்கு விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்துளித்து கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டனர்.
மாணவி பலி
ஆனால் மோனிகா பரிதாபமாக இறந்துவிட்டார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வராணி வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.