மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து விழுந்து பள்ளி மாணவி காயம்

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து விழுந்து பள்ளி மாணவி காயம் அடைந்தார்.

Update: 2023-07-28 21:30 GMT

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து விழுந்து பள்ளி மாணவி காயம் அடைந்தார்.


பழைய பஸ் நிலையம்


பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவருடைய மகள் ஜனனி (வயது 17). இவர் கோட்டூர் ரோட்டில் உள்ள நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு பொள் ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார்.


அப்போது பஸ் நிலையத்தின் மேற்கூரை காங்கிரீட் காரை திடீரென்று பெயர்ந்து விழுந்தது. அந்த சத்தம் கேட்டு அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.


மாணவி காயம்


இதற்கிடையே மேற்கூரை காங்கிரீட் காரை விழுந்து மாணவி ஜனனி காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.


இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பஸ் நிலையத்தின் மேல்தளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மேற்கூரை பழுதடைந்து ஆங்காங்கே இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்