ரூ.70 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகள்
சுவாமிமலையில் ரூ.70 லட்சத்தில் நடைபெற்று வரும் பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கபிஸ்தலம்:
சுவாமிமலையில் ரூ.70 லட்சத்தில் நடைபெற்று வரும் பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வகுப்பறை கட்டுமான பணி
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் ஊராட்சி ஒன்றிய, தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்த பள்ளியில் மாணவா்கள் அமா்ந்து படிக்க போதிய இட வசதியில்லாததால், கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்
இதை தொடர்ந்து, பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.70 லட்சம் ஒதுக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அமைச்சர் ஆய்வு
இந்த பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கல்யாணசுந்தரம் எம்.பி., மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கோட்டாட்சியர் பூர்ணிமா, தாசில்தார் வெங்கடேஸ்வரன், ஒன்றிய செயலாளர் முத்து செல்வன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் நடராஜன், இளங்கோவன், மதியழகன், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், துணைத் தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, பேரூர் தி.மு.க. செயலாளர் பாலு, தலைமையசிரியா், பேரூராட்சி உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து உடனிருந்தனர்.
பள்ளி கட்டிடம் திறப்பு விழா
முன்னதாக கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.21.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கல்யாண சுந்தரம், ராமலிங்கம், துணை கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அய்யாராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். விழாவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், சுதா, உதவி செயற்பொறியாளர் விஜய ரகுநாத், உதவி பொறியாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம், துணைத் தலைவர் நடராஜன், மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்தக்காரர் மணிவண்ணன் நன்றி கூறினார்.