மகனின் திருமணத்துக்கு வந்த மொய்ப்பணத்தை காப்பகத்துக்கு வழங்கிய ஓய்வுபெற்ற நூலகர்

மகனின் திருமணத்துக்கு வந்த மொய்ப்பணத்தை ஓய்வு பெற்ற நூலகர் ஒருவர், மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மற்றும் முதியோர் காப்பகத்துக்கு வழங்கினார்.

Update: 2022-07-02 18:13 GMT

மயிலாடுதுறை:

மகனின் திருமணத்துக்கு வந்த மொய்ப்பணத்தை ஓய்வு பெற்ற நூலகர் ஒருவர், மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மற்றும் முதியோர் காப்பகத்துக்கு வழங்கினார்.

கணக்கு போட்டு வாழும் மக்கள் மத்தியில்

தற்போதைய உலகில் ஒவ்வொரு செயலையும் பொதுமக்கள் கணக்குப்பார்த்்தே செய்யத்தொடங்கி விட்டார்கள். நாம் ஒரு விழா நடத்தினால் அதன் மூலம் இவ்வளவு மொய்ப்பணம், அன்பளிப்பு வசூல் ஆகும். அவ்வாறு வசூலாகும் பணத்தை வைத்து இதைச்செய்ய வேண்டும், அதைச்செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு கணக்குப்போட்டு தங்கள் வீடுகளில் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவதை பார்த்து இருக்கிறோம்.கணக்கு போட்டு வாழும் மக்கள் மத்தியில் தனது மகனின் திருமண விழாவுக்கு வசூலான மொய்ப்பணத்தை கணக்குப்பார்க்காமல் அப்படியே எடுத்து கொடுத்துள்ளார், மயிலாடுதுறையை சேர்ந்த ஓய்வு பெற்ற நூலகர் ஒருவர். அதைப்பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.

ஓய்வு பெற்ற நூலகர்

மயிலாடுதுறை திருவிழந்தூர் தென்னமரச்சாலையில் வசிப்பவர் ஓய்வு பெற்ற நூலகர் ஜெயக்குமார். இவரது மகன் திருமணம் மயிலாடுதுறையில் நடந்தது. திருமண அழைப்பிதழிலேயே ஓய்வு பெற்ற நூலகர் ஜெயக்குமார் அன்பளிப்பைத் தவிர்க்க வேண்டும் அந்த தொைகயை ஏழை, எளிய மக்களுக்கு நலஉதவிகள் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இருப்பினும் அன்பின் காரணமாக தனது வீட்டு திருமண விழாவுக்கு மொய் செய்தவர்களை மறுக்க முடியாததால் திருமண மண்டபத்திலேயே உண்டியல் ஒன்றை வைத்து விட்டார். தனக்கு வழங்கும் மொய் பணத்தை அந்த உண்டியலில் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ரூ.1 லட்சத்தை காப்பகத்துக்கு ஒப்படைத்தார்

அந்த வகையில் வசூலான ரூ.83 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் மேலும் சிறிது தொகையை சேர்த்து ரூ.1 லட்சத்தை மயிலாடுதுறையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகம் மற்றும் வயதான ஏழை மக்கள் ஆகியவற்றுக்கு அவர் நேற்று பிரித்து வழங்கினார்.மகனின் திருமணத்துக்கு பெண் வீட்டாரிடமும் வரதட்சணை பெற்றுக்கொள்ளாத ஓய்வு பெற்ற நூலகர் ஜெயக்குமார் குடும்பத்தினர், மொய்ப்பணமாக வந்த தொகையினையும் சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கிய செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்