மோட்டார் சைக்கிள் மீது மீட்பு வாகனம் மோதியது; வாலிபர் பலி-மனைவி படுகாயம்
விபத்தில் சிக்கிய லாரியை இழுத்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மீட்பு வாகனம் மோதியது. இதில் வாலிபர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். குடிபோதையில் இருந்த மீட்பு வாகன டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
விபத்தில் சிக்கிய லாரியை இழுத்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மீட்பு வாகனம் மோதியது. இதில் வாலிபர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். குடிபோதையில் இருந்த மீட்பு வாகன டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோட்டார் சைக்கிள் மீது மோதியது
கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லாரி விபத்தில் சிக்கியது. அந்த லாரி, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நேற்று மாலையில் மீட்பு வாகனம் மூலம் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தை ஆனைமலையை அடுத்த தாத்தூரை சேர்ந்த டிரைவர் பாலமுருகன் (வயது 45) என்பவர் ஓட்டினார்.
கோவை ரோடு சேரன் காலனி வளைவில் சென்றபோது திடீரென முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி தூக்கி வீசப்பட்டனர். மேலும் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது. அத்துடன் இழுத்து வரப்பட்ட லாரி, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவர், அறிவிப்பு பலகையை உடைத்துக்கொண்டு தென்னந்தோப்புக்குள் பாய்ந்தது.
சிகிச்சை பலனின்றி...
விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன், மனைவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதில், படுகாயமடைந்தது மதுரை ஆளவந்தான் பகுதியை சேர்ந்த அருண்குமார்(28), அவரது மனைவி ராஜீ என்பது தெரியவந்தது.
இதற்கிடையில் அருண்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜீ, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக கோவை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மீட்பு வாகனத்தின் டிரைவர் பாலமுருகன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.