ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து சத்தி, புஞ்சைபுளியம்பட்டியில் கடையடைப்பு போராட்டம்-பேக்கரி மீது கல்வீச்சு இந்து முன்னணி- பா.ஜ.க.வை சேர்ந்த 23 பேர் கைது

போராட்டம்-பேக்கரி மீது கல்வீச்சு

Update: 2022-09-20 19:30 GMT

ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து சத்தியமங்கலம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தின்போது பேக்கரிமீது கல்வீசி தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம்

நீலகிரி ஆ.ராசா எம்.பி., இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் 20-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் ஒவ்வொரு கடையாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டு போராட்டத்துக்கு ஆதரவு கேட்கப்பட்டது.

இதேபோல் நேற்று முன்தினம் சத்தியமங்கலம் நகர தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் கடைகளை திறந்து வைக்க வேண்டும் எனக்கோரி துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

கற்கள் வீசி தாக்குதல்

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் டீக்கடைகளை திறக்க சிலர் முயன்றனர். அப்போது கோட்டுவீராம்பாளையத்தில் பேக்கரி ஒன்று திறக்கப்பட்டது.

உடனே அந்த பேக்கரி மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் கடையில் இருந்த கண்ணாடி முழுவதும் நொறுங்கியது.

15 பேர் கைது

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர். மேலும் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் திறந்திருந்த டீக்கடையை அடைக்க கூறிய ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி குருசாமி, சுரேஷ்குமார், சீனிவாசன், பா.ஜ.க.வை சேர்ந்த சிவசக்திவேல், அரவிந்த்சாகர் உள்பட15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். சத்தியமங்கலத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. எனினும் சத்தியமங்கலத்தில் வழக்கம்போல் வாரச்சந்தையும், தினசரி மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகியவை இயங்கின.

உண்ணாவிரதம்

சத்தியமங்கலத்தில் நடந்த கடையடைப்பு போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டார்கள். இந்தநிலையில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட எங்களை சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நீலகண்டன் அநாகரிகமாக பேசியதாக கூறி காலை முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து மதியம் அங்கு வந்த மாநில செயலாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில் அனைவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி

இதேபோல் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட புஞ்சைபுளியம்பட்டி பகுதியிலும் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எனினும் சில கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளையும் மூடச்சொல்லி இந்து முன்னணியினர் வலியுறுத்தினர். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலைய நிலவியதால் புஞ்சைபுளியம்பட்டியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தாளவாடி- கடம்பூர்

இதேபோல் தாளவாடி மலைப்பகுதியில் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை 80-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. திடீரென கடைகள் அடைக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த சில்லரை வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

மேலும் டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் மலைக்கிராம பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் நேற்று காலை முதல் மதியம் வரை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்