பள்ளி வளாகத்துக்குள் புகுந்து அரிய வகை ஆமை
ஆண்டிப்பட்டி அருகே பள்ளி வளாகத்துக்குள் புகுந்து அரிய வகை ஆமையை வனத்துறையினர் பிடித்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் நேற்று ஆமை ஒன்று ஊர்ந்து வந்தது. இதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர், ஆண்டிப்பட்டி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஆண்டிப்பட்டி வன அலுவலர் அருள்குமார் தலைமையில் வனவர் விக்னேஷ், வனக்காப்பாளர் முருகன், வனக்காவலர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, ஆமையை பார்வையிட்டனர். அப்போது அந்த ஆமை, நன்னீரில் மட்டும் வளரும் அரிய வகை ஆமை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த ஆமையை வனத்துறையினர் மீட்டு, வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து மருத்துவ சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆண்டிப்பட்டி நக்கலகரடு காப்புக்காட்டில், நீர் நிலைகள் நிறைந்த பகுதியில் அந்த ஆமையை வனத்துறையினர் விட்டனர்.