திருச்செந்தூர் கோவிலில் 500 பக்தர்கள் அமரும் வகையில் வரிசை வளாகம் அமைக்கப்படும்

திருப்பதி திருமலை கோவிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலில் 500 பக்தர்கள் அமரும் வகையில் வரிசை வளாகம் (கியூ காம்பிளக்ஸ்) அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2022-05-31 23:06 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

காலடிப்பேட்டையில் 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் 2003-ம் ஆண்டு திருப்பணி முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தற்போது ரூ.80 லட்சம் மதிப்பில் பெருமாள், தாயார், ஆண்டாள், ராமர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சந்நிதிகள், 5 நிலை ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வரும் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்தவும், கோவிலை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு, மீண்டும் கோவில் வசம் சுவாதீனம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகஸ்டு மாதம் கும்பாபிஷேகம்

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட ஆகியவை செய்து தரவும், வாகன காப்பகத்தை முற்றிலும் நீக்கிவிட்டு புதிதாக கட்டவும், இப்பணிகள் அனைத்தும் முடிவுற்று ஆகஸ்டு மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 மற்றும் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 1,000 ஆண்டுகள் கடந்த 80 கோவில்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யப்படும்.

திருச்செந்தூரில் வரிசை வளாகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு இணையாக 500 நபர்கள் அமரும் வகையில் வரிசை வளாகம் (கியூ காம்பிளக்ஸ்) அமைக்கப்பட உள்ளது.

முக்கிய கோவில்களான ராமேசுவரம், சமயபுரம், பழனி, பெரியபாளையம் போன்ற கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோவில்களில் உள்ள காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் (பொறுப்பு) இரா.கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர் மற்றும் இணை-கமிஷனர் ந.தனபால், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்