தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி
தென்காசியில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வாசுதேவநல்லூர்:
கிராமப்புற இந்தியாவை கட்டமைப்பதற்காக புதிய திட்டங்களை பெற்று தொழில் முனைவோர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், வி த லீடர் பவுண்டேஷன், நெல்லை தினமலர் சார்பில், 'ஸ்டார்ட் அப் தென்காசி' நிகழ்ச்சி, தென்காசி இசக்கி மகாலில் நடந்தது. ஸோகோ ஐ.டி. நிறுவனரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீதர் வேம்பு தலைமை தாங்கினார். ஆய்க்குடி அமர் சேவா சங்க நிறுவனரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான எஸ்.ராமகிருஷ்ணன், அமர்சேவா சங்க சிவசரஸ்வதி வித்யாலயா பள்ளிகள் செயலாளர் எஸ்.சங்கரராமன், ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
வி த லீடர் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளரும், அமெரிக்காவில் ப்ரைட் ஆப் இந்தியா விருது பெற்றவருமான அ.ஆனந்தன் வரவேற்று பேசினார். ஸ்டார்ட் அப் தென்காசி அக்சயா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இணை அமைச்சர் ராஜூ சந்திரசேகர் காணொலிக்காட்சி மூலம் வாழ்த்தி பேசினார்.
நெல்லை `தினமலர்' நிர்வாகி தினேஷ், பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, பிரபல இசையமைப்பாளரும், பா.ஜ.க. வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவருமான தீனா, பா.ஜ.க விளையாட்டு போட்டிகள், இளைஞர் மேம்பாட்டுத்திறன் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, கிருஷ்ணா, தொழிலதிபர்கள் வரத் கிருஷ்ணா, ஸ்ரீதர் காமகோடி, ராஜாராம் வரதராஜன், தங்கராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
தொழில் முனைவோர்களின் 15 படைப்புகள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிறந்த படைப்புகளை உருவாக்கியதில் முதலிடம் பிடித்த ஜீவா டெக் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சமும், 2-வது இடம் பிடித்த எஸ்.மேக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த மைக்ரோசூன் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. ஸ்டார்ட் அப் தென்காசி பொறுப்பாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஸ்டார்ட் அப் தென்காசி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், பா.ஜ.க. வெளிநாடு, அண்டை மாநில தமிழக பிரிவின் துணைத்தலைவருமான அ.ஆனந்தன் செய்திருந்தார்.