திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி திருப்பூரில் பிடிபட்டார்
வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்ற கைதி திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். திருப்பூரில் இருந்த அவரை போலீசார் பிடித்தனர். இதனிடையே பணியில் கவனக்குறைவாக இருந்த 3 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருச்சி, ஜூன்.22-
வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்ற கைதி திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். திருப்பூரில் இருந்த அவரை போலீசார் பிடித்தனர். இதனிடையே பணியில் கவனக்குறைவாக இருந்த 3 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கைதி
புதுக்கோட்டை சின்னப்பா நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் தீபன்ராஜ் (வயது 31). இவர் கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி 2½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 9-ந்தேதி இவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்காக சிறை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
தப்பி ஓட்டம்
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தீபன்ராஜ் சிறைக்காவலர்கள் கவனிக்காத சமயத்தில் தப்பி ஓடிவிட்டார். இதை அறிந்து பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக்காவலர்கள் அவரை மருத்துவமனை முழுவதும் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
பின்னர் இதுபற்றி திருச்சி சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறை ஜெயிலர் சண்முகசுந்தரம் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
திருப்பூரில் பிடிபட்டார்
இதனை தொடர்ந்து தப்பியோடிய கைதி தீபன்ராஜ் திருப்பூரில் உள்ள அவரது அண்ணன் சத்யா என்பவர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற திருச்சி மத்திய சிறை போலீசார் நேற்று அதிகாலையில் தீபன்ராஜை கைது செய்தனர்.
மேலும் பணியில் கவனக்குறைவாக இருந்த சிறைத்துறை காவலர்கள் பிரகாஷ், கோவிந்தராஜன், வினோத்குமார் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மத்திய சிறை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டார்.