சாதாரண கற்களை மரகத கற்கள் எனக்கூறி பக்தர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த சாமியார்
சாதாரண கற்களை மரகத கற்கள் என்று கூறி பக்தர்களிடம் லட்சக்கணக்கில் சாமியார் மோசடி செய்ததாக பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
நாகர்கோவில்:
சாதாரண கற்களை மரகத கற்கள் என்று கூறி பக்தர்களிடம் லட்சக்கணக்கில் சாமியார் மோசடி செய்ததாக பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சாமியார்
நாகர்கோவில் மாநகர பகுதியை சேர்ந்த ஒரு பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு குளத்தின் கரையில் 2 பேர் சேர்ந்து கோவில் நடத்தி வருகிறார்கள். அதில் ஒருவர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், டெல்லியில் வேலை பார்த்த போது ஆன்மிகம் மீதான ஈடுபாடு அதிகமானதால் ஊருக்கு வந்து கோவில் அமைத்து உள்ளதாகவும் கூறினார். மேலும் நாகலோகத்தில் இருந்து வந்த பிறவி என்றும் அந்த சாமியார் கூறினார்.
இதனை நம்பிய நான், எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சில சிரமங்களுக்கு தீர்வு காண்பதற்காக அந்த கோவிலுக்கு சென்று தொடர்ந்து வழிபாடு செய்தேன். பின்னர் சாமியார் கூறியபடி பல பூஜைகளுக்காக எனது கணவர் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை விரயம் செய்தேன்.
மோசடி செய்து மிரட்டுகிறார்
ஆனால் அவர் கூறியது போன்று எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பின்னர் தான் அந்த சாமியார் மோசடி பேர்வழி என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து கோவிலுக்கு செல்வதை நிறுத்தினேன். என் தந்தை 6 மாதத்திற்கு முன்பு காலமானார். ஆனால் தன்னை எதிர்த்ததால் என் தந்தை காலமானதாக பலரிடம் அந்த சாமியார் கூறினார். தனது தெய்வீக சக்தியால் என் தந்தையை கொன்றதாகவும் அவர் கூறி வருகிறார். இதே போல என் தாயாரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி வருகிறார். அதே சமயத்தில் சாமியார் வண்ண கற்களை கொடுத்து அது நாக தெய்வங்கள் தனக்குத் தரும் மாணிக்க கற்கள் என்றும், விலை உயர்ந்தவை எனவும் கூறி அவற்றிற்காக பணம் வாங்கி தொடர்ந்து பக்தர்களை மோசடி செய்து வருகிறார்.
இதுமட்டும் இன்றி தெய்வம் தந்த தங்க நகைகள் தன்னிடம் இருப்பதாக பொதுமக்களிடம் கூறி நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார். மேலும் பாம்புகள் தன்னுடன் வசிப்பதாகவும், தான் தங்குமிடத்தில் ஏராளமான பாம்புகள் உள்ளதாகவும், அவை நள்ளிரவில் மாணிக்க கற்களை வாந்தி எடுத்து கொடுப்பதாகவும் கூறி வருகிறார். அவர் கூறுவதை பக்தர்கள் நம்பி விலை உயர்ந்ததாக அவர் கூறும் கற்களை அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளார்கள். ஸ்படிக சிவலிங்கம் என்ற ஒன்றை கோவிலில் வைத்து 75 ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் விற்றுள்ளார்.
மரகத கல் என கூறி...
சாதாரண கல்லை பச்சை மரகத கல் என கூறி ஏலம் விட்டு பல லட்சம் சம்பாதித்துள்ளார். எங்களிடம் ஒரு கல்லை கொடுத்து அவர் வீடுகட்ட ரூ.2 லட்சம் பணம் கடனாக பெற்றுக் கொண்டார். அந்த பணத்தை திரும்ப கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டது. மேலும் அந்த சாமியார் தன்னை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி போலியாக ஒரு அடையாள அட்டையை தயாரித்து வைத்துள்ளார். அதை வைத்து மோசடி செய்து வருகிறார். அந்த அடையாள அட்டையை வைத்துக் கொண்டு ரெயில்வே துறையிலும் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.5 லட்சம் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.
அவரது மோசடி வேலையை அறிந்து யாரேனும் வெளியே சொன்னால் அமாவாசை தினத்தில் பத்ரகாளி வருவதைப் போல் வேடம் அணிந்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் இவரிடம் பணத்தை இழந்தவர்கள் புகார் கொடுக்க முன் வருவதில்லை. வெளியே சொல்வதும் இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் எங்களிடம் இருந்து வாங்கிய பணத்தையும் வாங்கி தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.