பொக்லைன் ஆபரேட்டருக்கு பீர்பாட்டில் குத்து
பொக்லைன் ஆபரேட்டருக்கு பீர்பாட்டில் குத்து விழுந்தது.
கீரனூர் அருகே ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 7-ந்தேதி கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மோதலில் திருச்சி வங்கி அதிகாரி விக்னேஸ்வரன் (வயது 28) கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஓ. பள்ளத்துப்பட்டியை சேர்ந்த ரஞ்சித், ராமலிங்கம், மற்றொரு ரஞ்சித் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஓ.பள்ளத்துப்பட்டி, ஒடுகம்பட்டி கிராமங்களுக்கிடையே தொடர்ந்து பதட்டமான நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சேமத்துப்பட்டி பஸ் நிறுத்தத்தில் ஓ.நடுப்பட்டியை சேர்ந்த பொக்லைன் எந்திர ஆபரேட்டர் பாஸ்கர் (44) நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒடுகம்பட்டி கணேசன் மகன் மணிகண்டன், ராஜேந்திரன் மகன் அய்யப்பன் ஆகியோர் ரஞ்சித்துக்கு நீ தான் வண்டி ஓட்டுகிறாயா? என பாஸ்கரை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டியும், பீர்பாட்டிலால் கழுத்து பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஸ்கரை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் மணிகண்டன், அய்யப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.