ஆஸ்பத்திரியில் படுத்தவாறு ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவர்

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த பிளஸ்-2 மாணவர் ஆஸ்பத்திரியில் படுத்தவாறு ஆசிரியர் உதவியுடன் காலாண்டு தேர்வு எழுதினார்.

Update: 2023-09-21 20:23 GMT

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த சின்னத்துரை (வயது 17), வள்ளியூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய தங்கை சந்திராசெல்வியும் அதே பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்தார். கடந்த ஆகஸ்டு மாதம் இரவில் சின்னத்துரையின் வீட்டுக்குள் புகுந்த சக மாணவர்கள் உள்ளிட்ட கும்பல், சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது. இதனை தடுக்க முயன்ற சந்திராசெல்விக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர் சின்னத்துரை, தங்கை சந்திராசெல்வி ஆகியோர் தொடர்ந்து கல்வி பயிலும் வகையில், ஆஸ்பத்திரிக்கே சென்று சிறப்பு ஆசிரியர்கள் பாடங்களை பயிற்றுவித்தனர். தற்போது காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோர் ஆசிரியர்களின் உதவியுடன் ஆஸ்பத்திரியில் இருந்து தேர்வு எழுதுகின்றனர்.

சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரிடம் ஆசிரியர்கள் கேள்வித்தாளை வாசித்ததும், அவர்கள் கூறும் பதில்களை தேர்வுத்தாள்களில் ஆசிரியர்கள் எழுதினர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்தவாறே புத்தகங்களை படித்து தேர்வுக்கு தயாராகின்றனர். இவர்களுக்கு தேவையான மருத்துவ வசதியை அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள் செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்