சிகரெட் பிடித்ததில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஆற்காட்டில் சிகரெட் பிடித்ததில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-07 18:57 GMT

பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர்கள் கணேஷ் குமார் (வயது 23), மதன்குமார் (22), வினோத். நண்பர்களான இவர்கள் கடந்த 4-ந் தேதி ஆற்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஆட்டோவிற்கு பெட்ரோல் போட வந்துள்ளனர். அப்போது வினோத் மற்றும் மதன்குமார் ஆகிய இருவரும் பெட்ரோல் பங்க் அருகே சிகரெட் பிடித்துள்ளனர்.

இதனால் அங்கு மாதா கோவில் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாட்டில் இருந்த பெண்களுக்கும், இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அங்கிருந்தவர்கள் இவர்கள் மூன்று பேரையும் தாக்கியுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணேஷ்குமார், மதன்குமார், வினோத் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மாதா கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.

2 வாலிபர்கள் கைது

இதில் பெட்ரோல் பாட்டில் தீப்பிடிக்காததால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட கணேஷ்குமார், மதன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்