அமைதிக்கூட்டத்தில் சுமூக தீர்வு ஏற்படவில்லை

மேல்பாதி கோவில் திருவிழா பிரச்சினை தொடர்பான அமைதிக்கூட்டத்தில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து அக்கிராமத்தில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-04-09 13:47 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை ரத உற்சவ தீமிதி விழா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் இத்திருவிழாவின்போது வழிபாடு நடத்த தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அங்கு சென்ற வாலிபர் ஒருவரை சிலர் தாக்கியதாக கூறியும், கோவிலில் சாமி கும்பிட அனுமதி அளிக்கக்கோரியும் ஒரு சமூகத்தை சேர்ந்த மேல்பாதி, பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் இரவு 9.45 மணியளவில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மேல்பாதி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது.

அமைதிக்கூட்டம்

இப்பிரச்சினை தொடர்பான அமைதிக்கூட்டம் நேற்று விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், தாசில்தார் வேல்முருகன், வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மண்டல துணை தாசில்தார் ஜெயபால், தலைமையிடத்து துணை தாசில்தார் லட்சாதிபதி, வருவாய் ஆய்வாளர் சிவமூர்த்தி மற்றும் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், மறியலில் ஈடுபட்ட தரப்பினர் கூறுகையில், தங்களை கோவிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றனர். அதற்கு மற்றொரு தரப்பினர் கூறும்போது, நாங்கள் யாரையும் தடுக்கவில்லை, ஒரு சிலர் வேண்டுமென்றே வீண் பிரச்சினை செய்வதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து, கோவிலுக்குள் இரு தரப்பினரும் செல்லலாம், யார் வந்தாலும் அவர்களை தடுக்கக்கூடாது, ஏற்கனவே நடந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு இல்லாமலும், ஒருவருக்கொருவர் பிரச்சினையின்றியும் சமாதானமாக செல்வது என்று முடிவு எடுத்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர், இதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் மற்றொரு தரப்பினர், இதுபற்றி விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்களிடம் கலந்தாலோசித்து கருத்து சொல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் இந்த அமைதிக்கூட்டத்தில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

போலீஸ் குவிப்பு

இதையடுத்து மேல்பாதி கிராமத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி போலீசாருக்கும், தாசில்தாருக்கும் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.

மேல்பாதி கிராமத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அக்கிராமத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, அங்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியை பலப்படுத்தும்படி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்