லெட்சுமாங்குடியில் ஒருவழி பாதை அமைக்க வேண்டும்

லெட்சுமாங்குடியில் ஒருவழி பாதை அமைக்க வேண்டும்

Update: 2022-12-24 18:45 GMT

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த லெட்சுமாங்குடியில் ஒருவழி பாதை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ேபாக்குவரத்து நெரிசல்

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடியை மையமாக கொண்டு மன்னார்குடி சாலை, திருவாரூர் சாலை, வடபாதிமங்கலம் சாலை, கொரடாச்சேரி சாலை என நான்கு பிரிவு சாலை உள்ளது. இந்த சாலையில் ஒவ்வொரு நாளும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிப்பதுடன், பொதுமக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் லெட்சுமாங்குடி கடைவீதி சாலை பல ஆண்டுகளாக குறுகலான சாலையாகவே அமைந்துள்ளது தான்.

இந்த குறுகலான சாலையில் எதிர்எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அப்படியே பல மணி நேரம் ஸ்தம்பித்து நின்று விடுகிறது. இப்படி ஸ்தம்பித்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாரை சாரையாக அணி வகுத்து நிற்கும் போது, லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் வாகனங்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அவலநிலை தொடர்கதை போல் நீடித்து வருகிறது.

ஒருவழி பாதை அமைக்க வேண்டும்

இதனால் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லெட்சுமாங்குடியில் ஒரு வழி பாதை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த நடராஜன் கூறுகையில், லெட்சுமாங்குடி கடைவீதி சாலை சுமார் 100 ஆண்டுகளை கடந்தும், இன்றளவும் குறுகலான சாலையாகவே இருந்து வருவது பொதுமக்கள், வாகன ஓட்டிகளை நாளுக்கு நாள் சிரமத்தையே ஏற்படுத்தி வருகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, பள்ளி கல்லூரி வாகனங்களில் செல்லக்கூடிய மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் மற்றும் அவசர நோயாளிகளை அழைத்து செல்லும் வாகனங்கள், வெளியூர் செல்ல கூடிய பயணிகள், அவசர தேவை மற்றும் அவசரமாக வேலைக்கு சென்று வருவோர் மற்றும் கடைவீதி சென்று வரும் அனைவரும் கூட்ட நெரிசலில் சிக்கி பலமணி நேரம் சிரமம் அடைந்து வரும் அவல நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு வழி பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மக்கள் நடமாட்டம் குறைவு

இதுகுறித்து கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த கண்ணையன் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு, வாகனங்கள் அதிகம் இல்லாமல் இருந்தது. அதேபோல் மக்கள் நடமாட்டமும் குறைவாக இருந்தது. அப்போதைய கால கட்டத்தில் லெட்சுமாங்குடி கடைவீதி சாலை குறுகலாக இருந்தது சாத்தியமே. ஆனால், வாகனங்கள் அதிகரிப்பு, மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் குறுகலான லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் காலம் காலமாக தொடரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு வழி பாதை அமைப்பதே தீர்வுக்கு வழி வகுக்கும். இதனால் திருவாரூரில் இருந்து வரும் வாகனங்களை, லெட்சுமாங்குடி அப்துல்ரகுமான் சாலை வழியாக ஆஸ்பத்திரி சாலையை கடந்து லெட்சுமாங்குடி பாலம் வழியாக மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி மற்றும் ஏனைய ஊர்களுக்கு செல்லும் வகையிலும், மன்னார்குடி வழியாக வரும் வாகனங்களை லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் நேராக செல்லும் வகையிலும் ஒரு வழி பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்