ரூ.90 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம்

சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.90 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

Update: 2023-04-03 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.90 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

அரசு ஆஸ்பத்திரி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் தங்குவதற்கான போதிய இட வசதி இல்லை.

இதனால் நோயாளியுடன் வரும் உதவியாளர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்். மேலும் உதவியாளர்கள், உறவினர்களுக்கு இட வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்திருந்தனர்.

புதிய கட்டிடம் திறப்பு

இந்நிலையில் நோயாளிகளின் கோரிக்கை ஏற்று சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாரத் திட்டம் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உட்புற நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் தங்குவதற்கான புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு தலைமை டாக்டர் அருண் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சீர்காழி நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன், துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சித்ரா வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து குத்து விளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார்.

பல்நோக்கு ஆஸ்பத்திரி

அப்போது அவர் கூறுகையில், விரைவில் சீர்காழி ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் பல்நோக்கு ஆஸ்பத்திரி வளாக கட்டிடம் அமைய உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தை தூய்மையாகவும் சுகாதாரமும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதில் டாக்டர் மருதவாணன், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்தக்காரர் அன்பழகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்