ஓடும் அரசு பஸ்சில் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்தது; முதியவர் காயம்
ஓடும் அரசு பஸ்சில் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்து முதியவர் காயம் அடைந்தார்.;
குமரி மாவட்டம் மணக்குடியில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்துக்கு நேற்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. காலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ்சின் ஜன்னல் கண்ணாடி ஒன்று திடீரென உடைந்தது.
இந்த கண்ணாடி துண்டுகள் இருக்கையில் இருந்த மணக்குடியைச் சேர்ந்த மரிய ஆன்சன் (வயது 64) என்பவர் மீது விழுந்து சிதறியது. இந்த சம்பவத்தில் மரிய ஆன்சன் தலையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் மரிய ஆன்சனை சக பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்து போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
குமரி மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.