அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2022-06-28 20:08 GMT

பனமரத்துப்பட்டி:

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி அருகே உள்ள குமரவேல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுகுணா. இவர்களது மகன் பூபதி (வயது 21). டிப்ளமோ படித்து முடித்துவிட்டு கூலிக்கு தறி ஓட்டி வந்தார். இந்த நிலையில் பூபதி நேற்று ஆனி அமாவாசையையொட்டி சேலம் சின்னப்பம்பட்டி அருகே பணிக்கனூரில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக தாயார் சுகுணாவை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

அவர்கள் 2 பேரும் ஆட்டையாம்பட்டியில் இருந்து காக்காபாளையம் செல்லும் வழியில் உள்ள செக்குமேடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பூபதி ஓட்டிவந்துள்ளார். இதனிடையே ராசிபுரத்தில் இருந்து இளம்பிள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று செக்குமேடு பஸ் நிறுத்த்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது. அப்போது பூபதி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக, நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சுகுணாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கண் முன்னே மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்