வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை குடியிருப்புக்குள் புகுந்தது

வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை குடியிருப்புக்குள் புகுந்தது. அப்போது பொதுமக்களை நோக்கி யானை வந்ததால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.;

Update:2023-02-22 03:16 IST

பொள்ளாச்சி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை ஒன்று புகுந்தது. தொடர்ந்து இந்த யானை விளைநிலங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதையடுத்து அந்த யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அந்த யானையை பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர் கடந்த 5-ந்தேதி பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் உள்ள கோழி கமுத்தி யானை முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை அழைத்து சென்றனர். பின்னர் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தொடர்ந்து அந்த மக்னா யானையை 6-ந்தேதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள வரகளியாறு அடர்ந்த வனத்தில் இறக்கி விடப்பட்டது.

குடியிருப்புக்குள் புகுந்தது

இந்த மக்னா யானையை கண்காணிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மக்னா யானை வனப்பகுதியில் ஒரே இடத்தில் நிற்காமல் சுற்றி வந்தது. திடீரென இந்த யானை அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோழிகமுத்தி, அம்புலி, செம்மனாம்பதி வழியாக வனப்பகுதிக்குள் வந்தது.

பின்னர் மக்னா யானை அங்கிருந்து மாரப்பகவுண்டன்புதூர், செம்மேடு திம்பங்குத்து, தப்பட்டைகிளவன்புதூர், ராமநாதபுரம், ராமபட்டினம், தேவம்பாடிவலசு ஆகிய கிராமங்கள் வழியாக நடந்து குடியிருப்பு பகுதியை நோக்கி வந்தது. யானையை கண்காணித்துக்கொண்டு வேட்டைத்தடுப்பு காவலர்களும் பின்தொடர்ந்து வந்தனர். இதற்கிடையில் குடியிருப்பு பகுதிக்குள் மக்னா யானை புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

விவசாய நிலத்தில் உலா

வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த மக்னா யானை வயல்வெளிகளில் ஜாலியாக உலா வந்தது. விவசாய வேலைக்கு சென்றவர்கள் காட்டு யானையை பார்த்து அச்சம் அடைந்தனர். ஆனால் மக்னா யானை அட்டகாசம் செய்யாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததாலும், யானையை வனத்துறையினர் கண்காணித்து சென்றதாலும் நிம்மதி அடைந்தனர்.

இதற்கிடையில், குடியிருப்பு பகுதிக்குள் யானை புகுந்ததை அறிந்த பொள்ளாச்சி போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை வடக்கி பாளையம்-நடுப்பணி சாலையை கடக்கும் என்பதால் கோவிந்தனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களை கலைந்து போக அறிவுறுத்தினர். ஆனாலும் சிலர் யானையை செல்போனில் படம் எடுக்க ஆர்வம் காட்டியதால் அங்கிருந்து செல்லாமல் இருந்தனர்.

அப்போது சாலையை கடக்க முயன்ற மக்னா யானை திடீரென சாலையில் வடக்கிபாளையம் நோக்கி சென்றது. இதனால் யானையை பார்க்க நின்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நடந்து சென்றது.

இந்த நிலையில் மக்னா யானை களத்தூர் பகுதியில் சென்றபோது, களைப்படைந்து புதருக்குள் படுத்து தூங்கியது. யானையை பார்க்க அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து கலைந்துபோக செய்தனர்.

வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை, அங்கிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்