விருத்தாசலத்தில்கழிவுநீர் கால்வாய் பாலம் உடைந்து சிக்கிய லாரிதரமற்ற முறையில் அமைத்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

விருத்தாசலத்தில் கழிவுநீர் கால்வாய் பாலம் உடைந்து லாாி விபத்தில் சிக்கியது.

Update: 2023-04-12 18:45 GMT


விருத்தாசலம், 

சென்னை-கன்னியாகுமாரி தொழிற் தட சாலையில், உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் வரை 22.85 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இதில், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் ஆயியார் மடத்தெரு செல்லும் வழியில் சாலை அகலப்படுத்துவதற்காக கழிவுநீர் கால்வாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த வழியாக நேற்று அதிகாலை லாரி ஒன்று சென்றது. அப்போது, கால்வாய் மீது போடப்பட்டு இருந்த சிறிய பாலம் உடைந்து உள்வாங்கியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரம் அதனுள் சிக்கிக் கொண்டது. பின்னர், கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மெலிதான கம்பிகளைக் கொண்டு தரமற்ற முறையில் கால்வாயை அமைத்ததால், லாரி அதில் சிக்கிக்கொண்டதாக அந்தபகுதி மக்கள் தெரிவித்தனர். ஏற்கனவே தொழிற்தட சாலைபணிகள் மற்றும் இதற்காக அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். அந்த வகையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட கால்வாயில் உள்ள சிறிய பாலம் உடைந்து இருக்கிறது.

எனவே இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை தரமான முறையில் மேற்கொள்வதுடன், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்