சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தீயில் எரிந்து நாசம்
சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தீயில் எரிந்து நாசம் ஆனது.
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்தவர் பத்மசேகர் (வயது50). இவர் தனக்கு சொந்தமான லாரியில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காட்பாடி நோக்கி மதுரை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தார். அந்த லாரி கரூர் மாவட்டம் புகழூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, லாரியின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மசேகர் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினார். அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் லாரியின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.