மாமனார் வீட்டில் விஷம் குடித்த தொழிலாளி சாவு-மனைவி தன்னுடன் வர மறுத்ததால் விபரீத முடிவு

வாழப்பாடி அருகே தீபாவளிக்கு பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி தன்னுடன் வர மறுத்ததால் மனமுடைந்த கூலித்தொழிலாளி, மாமனார் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-30 21:11 GMT

வாழப்பாடி:

தொழிலாளி

பனமரத்துப்பட்டி அடுத்த நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 38), கூலித்தொழிலாளி. இவருக்கும், வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரித்தீஸ் (12) என்ற மகன் உள்ளார்.

தங்கராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே தீபாவளி பண்டிகையையொட்டி, நடுப்பட்டியில் இருந்து சிட்டாம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஆனந்தி சென்றுள்ளார். ஒரு வாரம் கடந்தும் இவர் தனது கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.

தற்கொலை

இந்நிலையில் நேற்று மாலை சிட்டாம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற தொழிலாளி தங்கராஜ், தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, களைக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.

இதில் மயங்கி கிடந்த அவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்