பண்ருட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை முயற்சி ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விபரீதம்

பண்ருட்டி அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2023-04-15 19:21 GMT

பண்ருட்டி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் மகன் தமிழ் குமார்(வயது 34), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சிவரஞ்சனி(28). இவர்களுக்கு ஹரிஷ்(9) என்கிற மகனும், சனா(6) என்கிற மகளும் உள்ளனர். தமிழ்குமார் தனது செல்போனில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் வீட்டில் இருந்த பணத்தை இழந்துள்ளார். மேலும் தமிழ்குமார் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அவரால் திரும்பி கடன் தொகையை செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் தமிழ்குமாருக்கும், சிவரஞ்சனிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்ததாலும், கடன் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாகவும் மனமுடைந்த தமிழ்குமார், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர் நேற்று மதியம் வீட்டில் வைத்து விஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ

இதற்கிடைய தமிழ்குமார் விஷம் குடிப்பதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை முகநூலில் வெளியிட்டுள்ளார். அதில், ஆன்லைன் ரம்மியால் நான் பல லட்ச ரூபாயை இழந்துள்ளேன். என் குடும்பம் நடுத்தெருக்கு வந்து விடும். என் உயிரை விட்டு விடுகிறேன். என் மனைவி சிவரஞ்சனி, குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் ரம்மியால் என் வாழ்க்கை போய்விட்டது. கட்சி தலைவர்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய போராட்டம் நடத்துங்கள் என உருக்கமாக பேசி உள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்